சனி, 29 டிசம்பர், 2012

புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 21

மருந்து உன் மைவிழிப்பார்வை!

களிம்புநின் கருவிழிப்பார்வை!

பிணிகளைப் போக்குமுன் கனிந்தநல் பார்வை!

நனிதரு நற்சுகம் அருள்வாய் தாயே!

புன்னைநல்லூர் தாயே! உன்னை

நம்பிநின்றேன் காப்பாயே!

ஆசைகள் நிரம்பிய உலகம்! நீ

ஆனந்தம் தருகின்ற இதயம்!

பூமழை பொழிகின்ற மேகம்! உன்

புகழ்தனை சொரிகின்ற கீதம்!

அம்மா! புன்னைநல்லூர் தாயே! எனை

பிணிநீக்கி சுகம் பெற வைப்பாயே!

செவ்வாய், 25 டிசம்பர், 2012


புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 20


விழியில் கருணை ஒளியே வழிய

வருவாய் அருள்வாய் மகமாயி!

வழியில் தொடரும் அடியார் மனதில்

பொலிவாய் பொழிவாய் மகமாயி!

வேதத்தின் முழுப்பொருளே! மிக உயர்ந்த 

நாதத்தின் உட்செறிவே!உனைத்துதிக்கும்

கீதத்தில் வந்துதிக்கும் தாயே! நின்

பாதத்தில் தலைசாய்த்தேன் காப்பாய் தாயே!

ஞாயிறு, 23 டிசம்பர், 2012


ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ் 19



வானமளந்த வண்ண விழியாள் எனக்கு

தானம் வழங்க வருவாயோ?-மன

ஊனமடைந்து உயிர்வாடி நிற்கும்

நானுமுயர வ்ழியொன்று காட்டாயோ?

அம்மா!

புன்னைவனத்தாயே! என்னை காப்பாயே!


நோயறுக்கும் மருந்து நீயே!-மனப்

பேய்விரட்டும் மந்திரம் நீயே!

தாயிருக்க வாடுவேனோ நான்?-உன்

தயவிருக்க வருந்துவேனோ நான்?

அம்மா!

புன்னைநல்லூர் தாயே!-எனக்கு

புத்துணர்வூட்டுவாய் நீயே!

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

நீ குளிர்ந்தா நிலம் குளிரும் அம்மையே அம்மா!-உன்னை

நினைச்சாலே மனம் குளிரும் அம்மையே அம்மா!

வாடவைக்கும் வினைகளெல்லாம் என்செயும் அம்மா-உந்தன்

வாழவைக்கும் திருக்கரங்கள் இருக்கையிலே அம்மா!


புன்னைநல்லூர் குடிகொண்ட அம்மையே அம்மா!

புகழனைத்தும் நீகொடுப்பாய் அம்மையே அம்மா!

உன்னையன்றி என் குறையை யார் அறிவாரோ?

உன்னடிகள் பற்றிநின்றார் வழி அறிவாரே!

வியாழன், 17 மே, 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 17

தனக்குவமை இலாத தாயே தயாநிதி!

தணித்த மஞ்சள் பூசும் ஒளி நிறைமதி!

எனக்கருள் தரும் உமா மகேஸ்வரி!

எல்லையிலா வெளி பாயும் மகாநதி!


சந்தனம் முல்லை சவ்வாது மரிக்கொழுந்து

சதிரிடும் தென்றலும் அந்தணர் விசிறலும்

தந்திடும் குளிர்ச்சியில் தணிந்திடும் தாயே

தஞ்சமுன் பொன்னடி காத்திடுவாயே!

ஞாயிறு, 13 மே, 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

மணிவிளக்கே! விளக்கின் திருச்சுடரே!

மலர்ச்சரமே! மலரின் நறுமணமே!

கனியமுதே! அமுதின் தனிச்சுவையே!

கவியழகே! கவியின் பொருள் நிறைவே!


ஒலியனைத்தும் இசையாய் சமைத்தவளே!

உலகமெங்கும் கனியாய் பழுத்தவளே!

மொழிகளிலே தமிழாய் இனிப்பவளே!

முயற்சியெல்லாம் ஜெயமாய் அளிப்பவளே..!

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 15

வாள்கொண்டறுத்து எம்குறைநீக்கி

வழிகாட்ட வருவாய் தயாபரி!

தோள்கொண்டமாலை அசைந்தசைந்தாட

துயர்போக்க வருவாய் மனோகரி!


நோய்நீக்கியருள்வாய் கனிவானதாயே!-நல்

நோக்கங்கள் தருவாய் நனிமகமாயே!

தாயுன்னை விட்டால் கதியேது-அம்மா

தள்ளாது என்னுள் வழிகாட்டு!