சனி, 29 டிசம்பர், 2012

புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 21

மருந்து உன் மைவிழிப்பார்வை!

களிம்புநின் கருவிழிப்பார்வை!

பிணிகளைப் போக்குமுன் கனிந்தநல் பார்வை!

நனிதரு நற்சுகம் அருள்வாய் தாயே!

புன்னைநல்லூர் தாயே! உன்னை

நம்பிநின்றேன் காப்பாயே!

ஆசைகள் நிரம்பிய உலகம்! நீ

ஆனந்தம் தருகின்ற இதயம்!

பூமழை பொழிகின்ற மேகம்! உன்

புகழ்தனை சொரிகின்ற கீதம்!

அம்மா! புன்னைநல்லூர் தாயே! எனை

பிணிநீக்கி சுகம் பெற வைப்பாயே!

செவ்வாய், 25 டிசம்பர், 2012


புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 20


விழியில் கருணை ஒளியே வழிய

வருவாய் அருள்வாய் மகமாயி!

வழியில் தொடரும் அடியார் மனதில்

பொலிவாய் பொழிவாய் மகமாயி!

வேதத்தின் முழுப்பொருளே! மிக உயர்ந்த 

நாதத்தின் உட்செறிவே!உனைத்துதிக்கும்

கீதத்தில் வந்துதிக்கும் தாயே! நின்

பாதத்தில் தலைசாய்த்தேன் காப்பாய் தாயே!

ஞாயிறு, 23 டிசம்பர், 2012


ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ் 19



வானமளந்த வண்ண விழியாள் எனக்கு

தானம் வழங்க வருவாயோ?-மன

ஊனமடைந்து உயிர்வாடி நிற்கும்

நானுமுயர வ்ழியொன்று காட்டாயோ?

அம்மா!

புன்னைவனத்தாயே! என்னை காப்பாயே!


நோயறுக்கும் மருந்து நீயே!-மனப்

பேய்விரட்டும் மந்திரம் நீயே!

தாயிருக்க வாடுவேனோ நான்?-உன்

தயவிருக்க வருந்துவேனோ நான்?

அம்மா!

புன்னைநல்லூர் தாயே!-எனக்கு

புத்துணர்வூட்டுவாய் நீயே!