ஞாயிறு, 25 மார்ச், 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 15

வாள்கொண்டறுத்து எம்குறைநீக்கி

வழிகாட்ட வருவாய் தயாபரி!

தோள்கொண்டமாலை அசைந்தசைந்தாட

துயர்போக்க வருவாய் மனோகரி!


நோய்நீக்கியருள்வாய் கனிவானதாயே!-நல்

நோக்கங்கள் தருவாய் நனிமகமாயே!

தாயுன்னை விட்டால் கதியேது-அம்மா

தள்ளாது என்னுள் வழிகாட்டு!



ஞாயிறு, 18 மார்ச், 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 14

சுந்தர வடிவுடை நாயகியே!

சுகந்தரும் தண்ணொளி விண்மதியே!

சந்தமும் கவிதையும் தந்தவளே!

சங்கடமனைத்தையும் தவிர்ப்பவளே!


எல்லா வளமும் எனக்களிப்பாய்

எங்கும் நிறை அருள் ஒளிச்சுடரே!

நில்லாதுன் முன் துயரங்களே

நிம்மதி நிம்மதி தருபவளே!

சனி, 10 மார்ச், 2012

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

இம்மைக்கும் மறுமைக்கும் இனிமை தருவாய்!

செம்மைக்கும் செம்மையான துணிவைத் தருவாய்!

உம்மைத் துதிப்போர்க்கு கருணை செய்வாய்!

அம்மை புன்னைநல்லூர்த் தாயே! எனை ஆதரிப்பாய்!

நெஞ்சம் முழுக்க வஞ்சம் வைத்தோர்

நேசம் தவிர்க்க நெறிகள் செய்வாய்!

கொஞ்சும் அழகே! கோல விழியால்

பாசம் சொரிந்து பகைகள் வெல்வாய்!

அம்மா..!

புன்னை வனத்தாயே! எனை

புவனம் அறிய புகழ்பெறச் செய்வாயே!