ஞாயிறு, 9 அக்டோபர், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

கனிவு மிகும் விழி பார்த்தேன் அம்மா!-அதில் வழியும்

இனிமைதரும் மொழி கேட்டேன் அம்மா!

துணிவுதரும் துயர்போக்கும் உயர்வினிலே

பணிவுதரும் அபயகரம் பற்றினேன் அம்மா!

புன்னை நல்லூர் தாயே!-உன்னை

வணங்கி நின்றேன் நானே!

சொல்லுக்குள் பொருளாக சொக்கி நின்றாய்!

வில்லுக்குள் விசையாகி உலகை வென்றாய்!

கல்லுக்குள் தேரைக்கும் கருணை தந்தாய் !

உள்ளுக்குள் உனைவைத்த என்னை காப்பாய் !

புன்னை நல்லூர் தாயே..! -உன்னை

சரணடைந்தேன் காப்பாயே..!



ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

கண்ணற்ற குருடனாய் காதவழி நடந்து விட்டேன்

எண்ணற்ற இடர்களை தாண்டி நிதம் சோர்ந்துவிட்டேன்

புண்ணற்ற இடமின்றி வலிதாங்கி துயருற்றேன்-அம்மா

புன்னை நல்லூர் தாயே!-உன்

எண்ணற்ற கரங்கள் தொட்டு எனை புதிது செய்தாய்!

புரியவைத்தாய்! பொற்பதங்கள் சரணடைந்தேன்..!



ஆழிசூழ் உலகெலாம் படைத்து தினம்

ஆட்சிசெய் அம்மையே போற்றி போற்றி!

வாழி நின் கொற்றமெலாம் என வாழ்த்திட

வாய்த்த நல் தகுதியிலா ஏழை வணங்கிநின்றேன்

புன்னைவனத்தாயே! எனை ஏற்றம்புரிய வைப்பாயே..!

வியாழன், 18 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 10

வெறுக்கும் பொருளுக்குள்ளும் வேதாந்தம் வைப்பாய் !-பகை

அறுக்கும் விழிச்சுடரால் ராஜாங்கம் செய்வாய்!

திசைகள் எட்டுக்குள்ளும் திமிராட்சி செய்வாய் !-நீ

விசைகள் அனைத்தினுள்ளும் வேராகி நிற்பாய்!


கட்டுத்தறியற்ற காற்றைக் கட்டி வைப்பாய் !

எட்டுத்திசை முட்டும் இசை கூட்டி வைப்பாய் !

வெட்டும்விழி கூரால் பகை தட்டி வைப்பாய் !

தட்டுதடுமாறிடுமெனை தாங்கி நிற்பாய் !

அம்மா! புன்னைவனத்தாயே !

உன்னை வணங்குகிறேன் !


சனி, 9 ஜூலை, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 9

தினந்தோறும் மாறிடும் மாறுதல் நீ !

ரணந்தோறும் கூறிடும் ஆறுதல் நீ !

கணந்தோறும் விரிந்திடும் கற்பனை நீ !

மனந்தோறும் பொழிந்திடும் மாமழை நீ !


ஆதியந்தம் இலாத ஜோதி வடிவே !

வேதமுற்றும் வடிவாக விளங்குமெழிலே !

நாதியற்ற பக்தர்குறை தீர்க்கும் அருளே !

நாதமென ஜீவனுக்குள் ஒலிக்கும் இசையே !

அம்மா...!

புன்னை நல்லூர் தாயே...!

உன்னை வணங்குகிறேன்..!

புதன், 22 ஜூன், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 8

எங்கும் நிறை மங்கலமே!-எழில்

பொங்கும் அருள் பொன்கலமே!

நெஞ்சம் நிறை செழுஞ்சுடரே!-தீய

வஞ்சம் அற எழும் கதிரே!


தமிழ் கொடுத்தாய்!தலை நிமிர வைத்தாய்!

நெஞ்சில் அறம் வளர்த்தாய்!எனை ஆதரித்தாய்!

கனல் வளர்த்தாய்! நன்றாய் கனிய வைத்தாய்!

புன்னை வனத்தாய்! என்றும் நீயே என் தாய்!





வெள்ளி, 10 ஜூன், 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 7

மறந்திடினும் நினைத்திடினும்
மனச்சிறையில் அடைத்திடினும்
திறந்தொளிரும் திகழ் ஒளியே!
கவிச்சுடரே! கலையமுதே..!

தனித்தமிழ் போல்
இனித்த நறுங் கனியமுதே..!
பனித்த விழி நனைந்திருக்க -நான்
பார்க்கும் எழில் கலையழகே..!

அம்மா..!
புன்னைவனத் தாயே..!-எனை
புகழ்பெறச் செய்வாயே..!

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 6


சுகிக்க கரைந்தோடும் உலகச்
சுகமனைத்தும்...
சுந்தரி நின் கருணைத் திருவிளக்கோ
ரசிக்க கணந்தோறும்
வளர்ந்து நிறைந்தொளிரும்..!

உருண்டிடும் காலம் கூட
உணர்ந்து நான் சுகிக்க சுகிக்க
உறையாது துளித்துளியாய்
கரைந்து தான் மெல்ல மெல்ல
காணாமல் போயொழியும்....

காலமும் கடந்த எந்தன்
கற்பகத்தருவே நின்னருள் நீழல் மட்டும்
சுகித்திட மேலும் மேலும்
வளர்ந்திடும்! சிறந்திடும் எங்கும்!

அம்மா!
கருணைக்கடலே!
கடலின் எழு முழு ஞாயிறே!
புன்னை நல்லூர் தாயே..!
உன்னை வணங்குகிறேன்..!


ஞாயிறு, 29 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 5

எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

வீரம் விதைத்தவள்! வெற்றி தருபவள்!
ஈரம் மிகுந்தவள் எங்கள் முத்துமாரி!

எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

பாரம் குறைத்தவள்! பக்தி கொடுத்தவள்!
தீரம் நிறைந்தவள்! எங்கள் முத்துமாரி!

எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

வெற்றி தருபவள்! வித்தை தருபவள்!
பற்றிட பாவங்கள் முற்றிலும் தீர்ப்பவள்!

எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

சுற்றிவரும் பகை சூதை அழிப்பவள்!
கற்றறிந்தார் தினம் பாடிடும் பாட்டவள்!


எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!
எங்கள் முத்துமாரி! அவள் தங்கமுத்து மாரி!

செவ்வாய், 17 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 4

நேரம் இருட்டாகலாம்
நீ வெளிச்சமாயிருப்பாய்...!

பாதை நீளமாயிருக்கலாம்-நீ
பக்கத்துணையிருப்பாய்...!

நடக்கும் வழியெலாம்
நீயென் கை பிடித்து
நடந்து வருவாயென்ற
நம்பிக்கை ஒன்று கொண்டே
நடந்து கொண்டேயிருக்கிறேன்-தாயே
புன்னைநல்லூர் பூமகளே!
என்
நம்பிக்கை கலையாமல்
நடந்து வா என்னோடு
எப்போதும்...!

சனி, 14 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 3

கரும்புள்ளியை பெரும்புள்ளியாக்குவாய்!
பெரும்புள்ளியை முற்றுப்புள்ளியாக்குவாய்!

அசைவை அபிநயங்களாக்குவாய்!
அபிநயங்களை அசைவற்று மாற்றுவாய்!

திரையை சித்திரமாக்குவாய்!
சித்திரங்களை விசித்திரமாக்குவாய்!

ஒரு சொல்லை கவிதையாக்குவாய்!
காவியங்களை காலால் இடறுவாய்!

மனமுருக வேண்டிடில்
மனதிற்குள் சிரித்து நிற்பாய்!
இதுபோல்
உளறிக் கொட்டுவதையெல்லாம்
உட்கார்ந்து கேட்பாய்!

புன்னைநல்லூர் தாயே!
உன்னை வணங்குகிறேன்!

திங்கள், 9 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 2

காற்றில் கையறு நிலையில்
ஆதரிப்பார் யாருமின்றி
அநாதையாய்
அலைபாய்ந்து வந்த
காட்டுப்பூ விதை நான்..
எனை
தாங்கி தயைகாட்டி
தங்குமிடம் கூட்டி
நிலமாய் நின்மடிதனிலே
நித்தமும் இளைப்பாற்றி
மரமாய் நிழல் தருவாய்
மாற்றிய பூமகளே!
புன்னைநல்லூர் தாயே!
சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
சிறியேனை ஆதரிப்பாயே!

வெள்ளி, 6 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்! 1

ஆடும் கால்களில் அணிசெயும்
ஆரம் ஒலியுடன் அதிர அதிர
பாடும் பவளவாய் மலர்விரித்தென்
பாரம் தணித்திட மொழிவாய்!-தாயே!

உள்ளத்தழுக்கினை எரித்திட தீயெடுத்து
உயிருக்குள் விளக்கினை ஏற்றிவைப்பாய்!
கள்ளப்புலனைந்தும் கட்டிப்புறந்தள்ளும்
கயிறுக்குள் கருவாய் வீற்றிருப்பாய்!

பிச்சையெடுத்தேனும் இச்சை தணித்திடும்
பிறவிப் பெருங்கடலில்
மூச்சையடக்கிட மோகம்நெறித்திட
கற்றுக் கொடுத்தவளே!-தாயே!

உச்சிமலைச்சுடர் நெற்றித்திலகமாய்
ஒளிர்ந்திட வருபவளே !
நிச்சயமாய் துயர் எட்டி விரட்டிடும்
நின்பதம் சரணமம்மா!

திங்கள், 2 மே, 2011

ஸ்ரீ புன்னைநல்லூர் மாரியம்மன் புகழ்!

தங்கநிறத்தொரு பட்டுடுத்தி

தரணியெல்லாம் உந்தன் புகழ்பரப்பி

வாளொடு கரங்கொண்டு வருபவளே!-எம்மை

வாழ வைக்கும் எங்கள் குலமகளே!